September 11, 2012

கடவுள் துகள்(HIGGS BOSON) அளவு என்ன?

0 comments
இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.
 



அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
-
ஆசான் திருமூலர்.


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-
ஆசான் திருமூலர்.


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-
ஆசான் திருமூலர்.

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார். இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm -
ஹைட்ரோஜென்


சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100
மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம் -

0.1/100 = 0.001
மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001
மில்லிமீட்டர் (MM)


இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025
மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

நன்றி: தமிழ் -கருத்துக்களம்- 
Continue reading →
September 1, 2012

நீதானே என் பொன்வசந்தம்

0 comments
மாலை மங்கும் நேரம்... கடற்கரை மணல் மேடு... 'சோ'வென பெய்யும் மழை... சுடச்சுட பஜ்ஜி... கையில் ஒரு கோப்பை தேநீர்... தனிமை அகற்றி தோள் சாய்த்துக் கொள்ள தோழி... "நீதானே என் பொன்வசந்தம்" பாடல் நாடா... இசைக்க இசைக்க வாசித்து வாசம் செய்யும் என் சுவாசம்... உருகி வழியும் நெஞ்சம்... ஆங்கே கரைந்து போகட்டும் ஆயுள்!!!

மீண்டும் மீண்டும் நாம் இறந்து பிறக்கலாம், எங்கள் 'இளையராஜா' வின் இசை பருக. வாழ்வின் இரு வேறு துருவங்களின் வற்றாத ஜீவ நதி - இந்த இசைஞானி !!!

'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்கள் - நாகரிக போதையை எரித்துச் சாம்பல் ஆக்கும் கற்பக விருட்சம்.

எந்த இசையைக் கேட்டாலும் வாராத தாலாட்டும் தூக்கமும் எங்கள் இசைஞானியின் இசையில் மட்டுமே உண்டு. இவன் இசை தாசர்களின் இரண்டாம் தாய்.

இந்த உலகில் இரண்டை மட்டும் நாம் கேட்டுக் கேட்டு அள்ளிப் பருகலாம் - ஒன்று பிறந்தவுடன் தாய்ப்பால் - இன்னொன்று இறக்கும்வரை இளையராஜாவின் இசை.

என்னோடு வா வா - பாடல்
 
Continue reading →
August 29, 2012

கடலில் மூழ்கிய கண்டம்

0 comments
கடலில் மூழ்கிய கண்டம் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.

ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.

அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.

ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.

மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.

மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.

இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.

அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.

மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.

௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….




மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.

௨) ஆடு மேய்ச்சான் பாறை…

தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர். ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.
இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.

௩) காவேரிப்பூம்பட்டினம்…

பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.

௪) தனுசுக்கோடி…

இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.

எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,
தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகாரம் உள்ளவர்கள் முயற்சி செய்வார்களா....!!!
Continue reading →
August 7, 2012

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

0 comments
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன் - 





பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.



இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான சக்தி தரும் தொழிற்சாலைதான் (எனர்ஜி ஃபேக்டரி) மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள்... இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.


கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.



அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.



கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

 - ஆக்கம் - ரவிநாக ராஜன்
நன்றி - http://www.aanthaireporter.com
Continue reading →
July 16, 2012

யானைப்பலி

0 comments
திருவிழாவில் யானை மிரள்வது என்பது கேரளத்தின் முக்கியமான கேளிக்கை நிகழ்ச்சி. எந்தத் திருவிழாவையும் யாரோ ஒருவர் ‘அய்யோ, ஆனை வெரெண்டே’ என்ற ஒற்றைவரிக் கூச்சலைக்கொண்டு கலக்கி விடலாம். நானெல்லாம் சின்னவயதில் குறைந்தது நான்குமுறையாவது அப்படி குடல்பதறி ஓடிவந்ததுண்டு. ஒரேஒருமுறை உண்மையிலேயே யானை மிரண்டது.

மஞ்சாலுமூடு பகவதியம்மன் கோயிலில், முதுகில் சாமியுடன் சென்றுகொண்டிருந்த பாறசால கேசவன் சட்டென்று நின்றுவிட்டது. பாகன் என்ன செய்தாலும் நகரமாட்டான். பாகன் சட்டென்று துரட்டியை எடுத்து அதன் காதில் செருகி இழுத்தான். கேசவன் பாகனை துதிக்கையால் லேசாக தட்டியதுபோல் இருந்தது. பாகன் கயிறுகட்டி தூக்கி எடுத்தது போல காற்றில் எம்பி விழுந்தான். யானை தலையைக் குலுக்கி பிளிறியபடி திரும்பியது. யானை தலைகுலுக்குவதென்பது மிகமிக அபாயகரமான ஒரு சைகை.

மொத்தகூட்டமும் எதிர்ப்பக்கமாக ஓட, யானை வேகமாகப் பக்கவாட்டில் சென்று, ஒரு மண்சரிவில் உடல் குறுக்கி இறங்கியது. குடைபிடித்தவர் கீழே குதித்துவிட்டார். போற்றி மட்டும் பீதியில் பிதுங்கிய முகத்துடன் மேலேயே அசைந்தாடிக்கொண்டிருந்தார். ஒரு மரத்தை நோக்கி யானை போகும்போது மேலே இருந்த போற்றி கீழே உருண்டார். அடி ஏதுமில்லை. பதறியபடி அவர் ஓடுவதை யானை திரும்பிப்பார்த்து ஒரு காலடி எடுத்து வைத்தபின் சரி வேண்டாம் என்று மரத்தடியில் சென்று நின்றுகொண்டது

பாகன் கையில் கம்புடன் பின்னாலேயே சென்று யானையை அதட்டினார். வயதான பாகன். இளம்வயது உதவியாளன் கூட்டத்தில் மறைந்துவிட்டான். யானை பாகனை நோக்கித் தலை குலுக்கி முன்னால் வந்தது. பின் மீண்டும் மரத்தடிக்கே சென்றது. யானை திரும்பித் தன்னை நோக்கி வரும்போது பாகன் பின்னால் ஓடினால் யானை மசியாது. அந்தக் கணத்தில் அப்படியே நின்று கூர்ந்து நோக்கி திடமான குரலில் கட்டளைபோடுவதில்தான் பாகனின் வெற்றி இருக்கிறது.
அதற்கு வெறும் தைரியம் மட்டும் போதாது. கட்டளைத்திறன் வேண்டும். யானையை மிக நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அனைத்தையும் விட மேலாக யானைக்கும் தனக்குமான தூரம், அது திரும்பிவரும் வேகம், அந்த நிலஅமைப்பு அனைத்தைப்பற்றியும் கணக்குப் போடத் தெரிந்திருக்கவேண்டும். நிர்வாகவியலில் ஒரு முக்கியமான படிமமாகவே இதை வைக்கலாம்.
மூன்றுமுறை கொம்புகுலுக்கிய யானை பின் மெல்ல அமைதியாகியது. ஒவ்வொருமுறையும் பாகனின் அதட்டல் அதிகரித்துக்கொண்டே சென்றது. நான்காம் முறை அவர் யானைக்கு மிக அருகே சென்றார். அந்தக்கணம் மூவாயிரம் ஜோடிக் கண்கள் நிலைகுத்தி அந்த பாகன் மேல் பதிந்திருந்தன. மூச்சடக்கப்பட்ட அமைதி நிலவியது. அதுவும் ஒரு மாபெரும் நிர்வாகவியல் படிமம். அத்தனை பேர் தன்னைக் கவனிக்கு அதி உச்ச கணத்தில் கைநடுங்காமல் இருப்பதும் சரி மிகையாக எதையாவது செய்யாமலிருப்பதும் சரி அபாரமான மனக்கட்டுப்பாட்டால்தான் சாத்தியம்.

யானை மசிந்தது. பாகன் அதன் காலடியில் குனிந்து இழுபட்டு பொடிமண்ணில் மூழ்கி கிடந்த சங்கிலியை எடுத்து மறுகால் சங்கிலியுடன் தளைத்தார். மொத்த கூட்டமும் ஆராவாரம்செய்தது. காட்டில் காற்றுநுழைந்தது போல ஒரு இயல்பான வியப்பொலி.

இந்த அனுபவத்தை எல்லாம் நான் ஒரு கதையாக ஆக்கினேன். காட்டில் தன்னந்தனியாக யானையை அடக்கப்போகும் ஒரு பாகனின் கதை. யானை ஏன் அடங்கிப்போகிறது என்பது மிகப்பெரிய வினா. அந்த வினாவுக்கான என் பதில் அது.

ஆனால் சிலசமயம் பாகன் தோற்றுவிடுவதுண்டு. பெரும்பாலும் முதல்பலி பாகனேதான். யானைப்பாகனுக்கு கொம்பிலே யமன் என்று சொல்லாட்சி உண்டு. தலைமுறை தலைமுறையாகப் பாகன்கள் யானையால் பாகன்கள் கொல்லப்பட்டாலும் வாரிசுகள் மீண்டும் பாகன்களாக வந்தபடியேதான் இருப்பார்கள். ’என் சோறும் வாய்க்கரிசியும் இதுதான்’ என ஒரு பாகன் தன்னுடைய யானையைச் சுட்டிக்காட்டி சொன்னது நினைவிருக்கிறது.
தீராத குழந்தைத்தன்மையுடன் தன்னருகே செவியாட்டி நிற்கும் கரிய உருவம் காலரூபம் என்று தெரிந்தேதான் பாகன் அதைப் பராமரிக்கிறார். குளிப்பாட்டி உணவூட்டி கொஞ்சிக் குலவிக் கூட வாழ்கிறார். கட்டிலில் படுப்பதுபோல யானைமேல் படுத்து இரவுறங்கும் பாகனைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் மரணத்தைக் குலவிக்கொண்டிருப்பதென்பது ஒரு பேறு. எல்லாமே புல்லுக்கு நிகராகிவிடுகிறது. பெரும்பாலான பாகன்கள் குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், எதையும் பொருட்படுத்தாதவர்கள்.

யானையைக் கோயிலில் அலங்கார மிருகமாக வளர்க்கக் கூடாது என்று கோரி அரசுக்கு மனுகொடுக்கவும், நீதிமன்றத் தடைபெறவும் போராடிவரும் சூழியல் குழுக்களுடன் நானும் சேர்ந்து செயல்படுகிறேன். அதேபோல யானையை சுமை இழுக்க, காடுகளில் மரம் வெட்டப் பயன்படுத்துவதை முழுமையாகவே கைவிடவேண்டும். இதற்குப் பெரும் மரவியாபாரிகளின் எதிர்ப்பு உள்ளது. முக்கியமாக இம்முயற்சிகளுக்கு இந்துத்துவ அரசியல்வாதிகளால் மதச்சாயம்பூசப்படுகிறது. அதைத் தீவிரமாக எதிர்த்து எழுதி வருகிறேன்.

இங்கே குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. நம் நாட்டில் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்துவது குறைந்தபோது படிப்படியாக நம்முடைய அற்புதமான காளை இனங்களே அழிந்து வருகின்றன. காங்கேயம் காளைகள் அடுத்த தலைமுறையில் இருக்குமா என்றே சிலர் சொல்கிறார்கள். யானையும் அப்படி அழிய விடக்கூடாது. யானையின் வாழ்விடமான காடு கடுமையான சட்டதிட்டங்களுடன் காக்கப்பட்டாகவேண்டும்.

யானைமீது கேரளத்தில் பெரிய பிரியம் உண்டு. கேரளத்தின் தனித்தன்மையே யானைதான் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான கோயில் விழாக்கள் உண்மையில் யானை விழாக்களே. யானையைக் கோயிலுக்குப் பயன்படுத்துவதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கோயில்களில் விழாநிர்வாகப்பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களுக்குக் காலத்தைப் பின்னால்கொண்டுசெல்லலாம் என எண்ணமிருக்கிறது. ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்கு எதிராகத் தமிழகத்தில் எழும் அதே பண்பாட்டுப் போர்க்குரல்தான்.
சமீபத்தில் கேரளத்தில் நடந்த பல நிகழ்வுகள் அந்த மதத்தைச் சார்ந்த நம்பிக்கையாளர்களையும் யோசிக்கச் செய்திருக்கின்றன. தொடர்ச்சியாகத் திருவிழாக்களில் யானைகள் மிரண்டு உயிர்ப்பலி நிகழ்கிறது. இவ்வளவு அடிக்கடி இது முன்னால் நிகழ்ந்ததில்லை. பலிகளும் இவ்வளவு இல்லை.

இது ஏன் நிகழ்கிறது என்பது சிக்கலான வினா. விழாவில் யானைகளைப் பயன்படுத்துவது சென்ற காலங்களில் சாதாரணமாக நடந்து வந்த விஷயம்தானே?

பழையகாலமே வேறு. கேரளத்தின் மிகப்பெரிய திருவிழாவான திரிச்சூர் பூரத்துக்கே இரண்டாயிரம் பேர் வந்தால் அதிகம் என்ற நிலை முப்பதுகள் வரை நிலவியது. போக்குவரத்து வசதிகள் குறைவு. பல சாதிகள் பயணம் பண்ணவே அனுமதிக்கப்பட்டதில்லை. இன்று ஒரு லட்சம்பேர் வரை வருகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதே பெரும் சவாலாக உள்ளது. யானைமிரண்டால் வரும் கலவரம் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துப் பெரும் அழிவை உருவாக்குகிறது. வெறும் கொள்ளை நோக்குடன் கலவரத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு யானையை மிரளச்செய்யும் வழக்கமும் உள்ளது என்கிறார்கள்.
இரண்டாவதாக இன்று நாம் ஊரெங்கும் போட்டு வைத்திருக்கும் தார்ச்சாலைகள் சிமிண்ட் தளங்கள் யானைகளின் கால்களுக்கு மிகமிக அசௌகரியமானவை. சமீபத்தில் யானை மிரண்ட இடங்களில் எல்லாமே யானை கொதிக்கும் தார்ச்சாலையில் மிதித்ததே காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காட்டில் ஈரமான தரையில் புல்மேட்டிலும் சேற்றிலும் நடக்கும் நம்மூர் யானைகளால் மேமாத சாலையின் சூட்டைத் தாங்க முடிவதில்லை.

இன்று வாகனப்போக்குவரத்தும் ஒலிப்பெருக்கிகளும் அதிகரித்து உருவாகியிருக்கும் ஓசைப்பெருக்கம் யானைக்கு தாங்கமுடிவதாக இல்லை. யானையின் காது மிகமிக நுட்பமானது. நம்மைப் போலப் பலமடங்கு அதிகமான ஒலிகளைக் கேட்கும் யானை திருவிழாக்கள் அல்லது நகரத்துச் சந்திப்புகளில் எழும் நம்மாலேயே தாங்கமுடியாத ஓசையை எப்படித் தாங்குகிறது என்பதே ஆச்சரியம். அதேபோல யானையின் நாசியும் மிக நுட்பமானது. நாம் இன்று சூழலில் அள்ளி வீசும் ரசாயனங்களின் வீச்சம் யானையை நிலைகுலையச் செய்கிறது.
கடைசியாக, இன்றைய நெரிசலான சாலையில் நிலைகுலைந்த யானை புகுவதென்பது மிக அபாயகரமானது. யானைக்கும் மக்களுக்கும். இன்றைய யானைகள் பெரும்பாலும் போதிய உணவு கொடுக்கப்படாதவை. தென்னையின் நாடான கேரளத்திலேயே யானைகளுக்குத் தேவையான பச்சையுணவு கிடைப்பதில்லை என்னும்போது தமிழகத்தில் வறண்ட சூழலில் கோயில் கல்மண்டபத்தில் வளர்க்கப்படும் யானையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒருமுறை ஒரு கோயில்யானைக்குப் பழைய தாள்களை உணவாகப் போட்டிருப்பதை, அது மென்று தின்றுகொண்டிருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன்.

காலம் மாறிவிட்டிருக்கிறது. எத்தனையோ ஆசாரங்களை நாம்எப்பவோ கைவிட்டிருக்கிறோம். மாற்றியிருக்கிறோம். இந்து மதம் என்பது இந்தச் சடங்குகளைச் சார்ந்து செயல்பட்டாகவேண்டிய ஒன்றல்ல. அதன் சாராம்சம் ஆன்மீகமானது, தத்துவம் சார்ந்தது. இவையெல்லாம் வெளிப்பாடுகளே. இவற்றைப் பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்ள எண்ணுவதென்பது கண்மூடித்தனம். முன்பு உடன்கட்டை ஏறுதலையும் பொட்டுக்கட்டுதலையும் தீண்டாமையையும் எல்லாம் ஆதரித்த அதே மனநிலை.
இன்றைய சூழலில் அலங்காரமிருகமாக யானையை வளர்ப்பதை முழுமையாகத் தடைசெய்யவேண்டும். ஆலயங்களில் யானையை வளர்ப்பதும் ஊர்வலங்களுக்குக் கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும். யானை தளைக்கப்பட்டு வளர்க்கப்படவேகூடாது. அதன் இயற்கையான சூழல்களில் மட்டுமே அது வாழவேண்டும். இன்றைய நாகரீகத்துக்கு நாம் யானைகளை பலிகொடுக்கக் கூடாது.

யானை என்ற இந்த மகத்தான உயிரினத்தை நாம் பிரம்மசொரூபமாகவே எண்ணி வந்திருக்கிறோம். உயிரின் பெருவல்லமை வெளிப்படும் ஊற்றுமுகம் அது, ஆலமரம் போல , கடலாமை போல. உயிராக வெளிப்படுவது பிரபஞ்ச சக்தியேதான். அவ்வாறு நாம் யானையை வழிபடுவது ஆத்மார்த்தமானது என்றால் வெற்றுச்சடங்குகளுக்காக யானையை அழிக்கலாகாது. அதன் கண்ணீர் மீது நம்முடைய ஆலய மணியோசை முழங்கலாகாது.
கீழே கொடுத்திருக்கும் இரு சுட்டிகளும் என்னை மிகவும் கொந்தளிக்கச்செய்தன. ஒன்று கேரள ஆலயமொன்றில் யானை மிரளும் காட்சி. அதில் உயிர்ப்பலி நிகழும் விதம், அந்தப் பாகனின் பரிதாபமான மரண அலறல். எனக்கு அந்தக்காட்சியிலும் யானைமீதே பரிதாபம் வந்தது. தன்னால் புரிந்துகொள்ளவே முடியாத நவீனநாகரீகம் என்ற பேய்க்கு எதிராகத்தான் அந்த வனஉயிர் கொந்தளித்து மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறது.

http://www.youtube.com/watch?v=XWmToj9Xy6s&feature=related

இரண்டாவது சுட்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வனக்காவலர்களால் காட்டுயானை அடித்தே கொல்லப்படுகிறது. காரணம் ஊருக்குள் வந்துவிட்டதாம். இப்படி அடித்துக்கொல்ல அரசாணையே துணை புரிகிறது. யானைகளைப் ‘பிடிக்க’ அரசு உத்தரவிடுகிறது. கல்லையும் கம்பையும் கொண்டு பிடிக்க முயல்கிறார்கள். கொல்கிறார்கள். பதினான்கு யானைகள் இப்படி ஒரேகாட்டில் ஒரே வருடம் அடித்துக்கொல்லப்பட்டன.

அதை இதழாளர் மைக் பாண்டே ஆவணப்படம் எடுத்து உலகமெங்கும் கொண்டு சென்று காட்டியபின் இந்திய அரசு ஒப்புக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் யானைகள் இன்றும் காடுகளில் பலவழிகளில் கொல்லப்படுகின்றன.அந்த ஆவணப்படம் கிரீன் ஆஸ்கார் எனப்படும் பண்டா விருது பெற்றது.

அந்தக் காணொளியில் யானை சாவதற்குள் வெண்குருதி கொட்ட யானையின் கொம்பை வனக்காவலர்கள் வெட்டி எடுக்கும் காட்சியே குரூரத்தின் உச்சம். அது எந்தப் பிரமுகர் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் என்று சொல்லமுடியாது.

எப்படிக் கோயில்யானைகளை வதைப்பதை பக்தர்கள் ஆதரிக்கிறார்களோ அப்படிக் காட்டுயானைகளைக் கொல்வதை விவசாயிகள் ஆதரிக்கிறார்கள். தடியும் தீயுமாக யானையைக்கொல்ல உற்சாகமாகக் கிளம்பிச்செல்லும் அந்த மக்களைப் பாருங்கள். செத்த யானையைப் புதைக்கும்போது ஒரு மாலை குழியில் வீசப்படுகிறது – அது கணேசன் அல்லவா?

யானை கோயிலில் சிறையிருக்கவேண்டும், காடுகளில் கொன்றழிக்கப்படவேண்டும். இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? நாம் நாகரீக மக்கள்தானா?


பார்க்க


- ஆக்கம் : எழுத்தாளர் ஜெயமோகன்


 (நன்றி http://www.jeyamohan.in/)
Continue reading →
July 9, 2012

நிதர்சனம்

0 comments
மூணு பசி இருக்கு ஒரு உசுருக்கு
இதயம் - வயிறு - வயித்துக்கு கீழ் உள்ள ஒரு உறுப்பு.
இந்த மூணையும் திருப்திப்படுத்துறதுக்கே
சென்மம் செலவாகி போயிருது.
--மூன்றாம் உலகப்போர் (கவிபேரரசு வைரமுத்து)

# வாழ்கையின் புற அக செயல்களுக்காகவும், அந்த பசி நோக்கும் அஃறிணை உறுப்புகள் வளர்ப்பதுக்காகவும், உயர்திணையாகிய இவ்வுயிரை முற்றிலுமாக கரைத்த பின்னர், சாமியையும் சடங்குகளையும் கோயிலுக்குள் பூட்டி வைத்து விட்டு, உடல் தேடும் "மூன்று" பசியும் அடங்காமலும் அடங்கியும் முடிந்து விடுகிறது சென்மம்.
 

நிதர்சனம் !!!
Continue reading →
June 30, 2012

வரலாறு இன்னும் மிச்சம் உள்ளது

0 comments
"தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினரால் ஆனந்தபுரம், சாலை,முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டுவைக்காமல் அழிக்கவும் எலும்புகளை மக்க வைக்கவும் சீனாவிலிருந்து சிறப்பு திரவத்தை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளது."
--செய்தி

#உலக வரலாறுகளில் பழிவாங்கல் என்பது ஆதாரம் ஆராய்ந்து நிகழ்ந்தது இல்லை. தலைமுறை தலைமுறையாய் செவி வழி சொல்லப்பட்ட கதைகளின் ஊடே, மாந்தர்கள் ஊடே தான் நடந்துள்ளது. சானக்கியனோ சங்கிலியனோ சரி அந்த தகுந்த சந்தர்பத்துக்காகதான் காத்தவண்ணம்...................


வரலாறு இன்னும் மிச்சம் உள்ளது.
Continue reading →
May 17, 2012

இன்றைய மே 18' 2018

0 comments
சுதந்திரமாய் தமிழ்க்காற்றை
சுவாசித்து மூச்சுவிட – இங்கு
யாருக்கும் நாதியில்லை!
ஈழத்துத் தெருக்களில்
எஞ்சிக்கிடக்கின்றன
மனித உயிர்களும்
தமிழினமும்!

வலிகளைச் சுமந்த வாழ்க்கையும்...
வடுக்களைச் சுமந்த மனதுமாக....

இன்றைய மே 18 லும் மரணித்த மானுடத்திற்கு இன்னமும் நீதி கிட்டாமல் காலம் கடக்கிறது :((
Continue reading →
March 28, 2012

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி

0 comments
நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன். திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான்.

என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது. நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம். பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.
மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.
*குறிப்பு: ‘அன்பின் விடுமுறை தினங்கள்’ என்னும் தலைப்பு மனுஷ்ய புத்திரனின் ‘ஆதீதத்தின் ருசி’ தொகுப்பிலிருக்கும் கவிதையின் தலைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

(நன்றி: http://www.tamilpaper.net/?p=5684)
Continue reading →