March 28, 2012

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி

0 comments
நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன். திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான்.

என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது. நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம். பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.
மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.
*குறிப்பு: ‘அன்பின் விடுமுறை தினங்கள்’ என்னும் தலைப்பு மனுஷ்ய புத்திரனின் ‘ஆதீதத்தின் ருசி’ தொகுப்பிலிருக்கும் கவிதையின் தலைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

(நன்றி: http://www.tamilpaper.net/?p=5684)
Continue reading →
March 24, 2012

கூடங்குளம் - வேண்டாம் உயிர் கொள்ளிகள்

0 comments
நிற்க - கொஞ்சம் படிச்சுட்டு போங்க பாஸ்... ப்ளீஸ்...

"கூடங்குளம்..." இன்றைய அரசியலின் மைய புள்ளி. சர்வதேச அரசியல் சதுரங்கத்தின் ராஜா. சரி இப்ப விசயத்துக்கு வர்றேன்.....

ஒரு சிலர் எந்த உட்கருவும் இல்லாமல், மின்சாரம் வேண்டும் என்பதற்காக மட்டும் கூடங்குளத்தை செயல்பட வைக்கணும்'னு சொல்கிறார்கள்... அந்த அறிவு ஜீவிகளுக்கும்\ மர மண்டைகளுக்கும் இது சமர்ப்பணம்..

அவர்களின் கேள்வி எனக்கு ஓரளவிற்கு ஏற்றுகொள்ளக் கூடியதாக இருந்தாலும், கூடங்குளம் கல்பாக்கத்திலிருந்து நிறைய வேறுபாடுகள் (கூடவே தீமைகளும் நிறைய..) கொண்டது....

முதலில், கல்பாக்கம் பற்றி கொஞம் பார்க்கலாம்......
"சென்னை'க்கு அருகில் தானே உள்ளது..!??!!!?"
"அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே..!???"
"அங்க மக்கள் வாழ்றது இல்லையா..!!???"

(நீங்க கேக்குறது எனக்கு புரியுது... கீழ படிங்க...)

கல்பாக்கம் - அணுமின் நிலையம்.. (Atomic Reactor )

கூடங்குளம் - அணுக்கரு நிலையம் (Nuclear Reactor )

மேட்டூர் - அனல்மின் நிலையம் (Thermal Power 'Station')

நல்லா படிங்க அணுமின்... அணுக்கரு... அனல்மின் நிலையம்
(இப்பவும் அர்த்தம் தெரியலனா Google பண்ணுங்க.....)

*********************************************************************************
இப்போ Chemistry என்ன சொல்லுது னா...

அணுவைப் பிளப்பதினால் ஏற்படும் கதிர்வீச்சைவிட (Radio-activity )
அணுக்'கரு'வைப் பிளப்பதினால் ஏற்படும் கதிர்வீச்சு (Radio-activity ) பல 100 மடங்கு அதிகம். (உங்களுக்குத் தெரிஞ்ச Chemistry வாத்தியார்ட்ட கேளுங்க)

இப்போ சொல்லலாம்... அவர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்கும். - இருக்குதா இல்லையா???

*********************************************************************************
இப்ப, ஏதும் பிரச்சினை என்றால உடனடியாக அவற்றை குளிர்வித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியுமே..??? இப்படியும் நீங்க கேக்கலாம்

Atomic Reactor ஐக் கொஞ்சம் வேகமாகக் குளிர்விக்கலாம். ஆனால், Nuclear Reactor ஐக் குளிர்விப்பது என்பது சாதாரண செயல் இல்லை.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடே "போராடி" செய்த காரியம் அது.
(Note பண்ணுங்க Note பண்ணுங்க "போராடி" செய்த விசயம்)

*********************************************************************************
உங்க அடுத்த கேள்வி - "ஏன் இந்தியா வளரலையா..?? இந்தியாவால் முடியாதா..?" (நீங்க கேக்குறது புரியுது...)

அப்பா... சாமி.... உன் தேசப்பற்றை நான் பாராட்டுகிறேன். உன்னை மாதிரியே இங்க இருக்குற எல்லாரும் கெடையாதே...!!! (Bhopal விசவாயு வழக்கு இன்னும் Court'ல இருக்கு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடுகளவுகூட நஷ்ட ஈடு வழங்கல Government)

*********************************************************************************
அடுத்து என்னப்பா ???

America, China போன்ற வளர்ந்த நாடுகள் கூடங்குளம் போல Nuclear Reactor வச்சுத்தான் மின்சாரம் எடுக்குறாங்களாமே...... இப்டி இலுவையாய் கேட்க தோணுமே.. என்ன ????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சொல்றேன் -
அமெரிக்க, சீனா போன்ற நாடுகளில் பில்டிங் Contractor 'கிட்ட கமிஷன் வாங்குற MP, MLA கெடையாது. கமிஷன் குடுத்துட்டு சத்து இல்லாத பில்டிங் கட்டிக்குடுக்குற Contractor'ம் அங்க இல்லை..

அங்க கடமை தவறும் யாரா இருந்தாலும் சுட்டுபொசுக்கிடுவாங்க.... But இங்க...??? இதுக்கு விடை உனக்கே தெரியும். 
(கணக்கு பண்ற 'பிகர்' வேற... கணக்குல இருக்குற 'பிகர்' வேற...)

*********************************************************************************
இப்போ இன்னொரு விசயத்துக்கு வர்றேன்...
"வெளிநாட்ல இருந்து காசு வருதாம்....போராட்டம் பண்றாங்களாம்... மக்களைப் பயப்படுதுறாங்களாம்..."
.......இப்டி நீ முனுகுற சத்தம் கேக்குது பா.

அட... அது கெடக்கட்டும் கழுதை... கூடங்குளம் பாதுகாப்பானதா.. இல்லையா??? அதுக்கு பதில் சொல்லுங்க..... ("மனசாட்சியோட...")

*********************************************************************************
இது எல்லாத்துக்கும் மேல ரஷ்யா க்கு மின்சார வழங்க நம்ம ஜனங்க ஏன் தினம் தினம் பயந்து சாகணும்.....

அப்பா நமக்கு.....????? அட போப்பா! நெய்வேலி நிலக்கரி மின் நிலையம் மூலமாகவும் கல்பாக்கம் மூலமாகவும் வராத மின்சாரமா வந்துவிட போகிறது??? அப்புறம் ஒன்ன Note பண்ணுங்க... எந்த மாநிலத்திலையும் நிலக்கரி சுரங்கமும் அணுமின் நிலையமும் இல்ல.. ஆனா அங்கெல்லாம் மின்வெட்டும் இல்ல.....

அப்பறம் அந்தக் கோயம்புத்தூர் தொழிலதிபர்களே! மதுக்கரை'ல ஒரு Nuclear Reactor ஆரம்பிக்கச் சொல்லி அரசுக்கு பரிந்துரைக்கலாம்'னு இருக்கேன்... என்ன சொல்றீங்க..??? அப்புறம் யாரது அம்மாவா... போயஸ் கார்டன் பக்கத்துல ஒன்னு கட்ட வேண்டியதுதானே.... அழகா இருக்குமே...???)

பி.கு:- இந்தக் கேள்வி அரசியல்வாதிகளுக்கு இல்லை.

*********************************************************************************
கூடன்குளமோ...
கல்பாக்கமோ...
டாஸ்மாக் கடையோ...
எல்லாமே தேவை தான்!
நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இல்லாத வரைக்கும்...

நாம AC காத்து வாங்க, ஒரு சமுதாயத்தை எரித்து வந்த தீயில் இருந்தா மின்சாரம் வேண்டும்..!!???
(பொன நாத்தம் அடிக்கும்.. நாரிடுவீங்க...)

(
நன்றி - கரு உதவி : கார்த்திக் ராஜா )
Continue reading →
March 6, 2012

யார் இந்த கோச்சடையான்

0 comments
# யார் இந்த கோச்சடையான்??????

சமீபத்தில் தமிழக மக்கள் அதிகமாக உச்சரித்த பெயர் "கோச்சடையன்", எப்படி உச்சரிக்காமல் இருக்க முடியும் ? தமிழக மக்கள் அனைவரின் அபிபான நடிகரின் வரப்போகும் படம் ஆயிற்றே ! !. இதில் நம்மில் எத்தனை பேர் அந்த படத்திற்கு கொடுக்கும் ஆர்வத்தை, அந்த பெயரின் சொந்தக்காரனின் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள கொடுத்திருப்போம் ! ! ? ?

யார் இந்த " கோச்சடையன் " ? ? இதோ அவனைப்பற்றிய சில தகவல்கள்..

சங்கம் வைத்து நம் ...தமிழை காத்த மரபில் வந்த பாண்டிய மன்னன் தான் இந்த " கோச்சடையன் ரணதீரன் "கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தவன். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

படையெடுத்துச் சென்ற இவன், முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. .

ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

( நன்றி - தமிழ் இணையம்)
Continue reading →