February 19, 2013
0 comments

முக அழகைக் கெடுக்கும் முகப்பருவை தவிர்க்க 10 வழிகள் -


முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.

முகப்பருக்கள் எதனால் வருகிறது?
தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.

how-to-get-rid-of-pimples
இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை.

சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.

01. ஆவி பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

02. கராம்பு
கராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

03. அடிக்கடி முகத்தை கழுவுதல்
அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

04. சந்தன பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

05. தேன்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

06. எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

07. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

08. தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

09. வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

10. தண்ணீர் குடிக்கவும்
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.
Continue reading →
February 2, 2013
0 comments
மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.
Continue reading →
February 1, 2013
0 comments
ஒரு கருவறையின் அறுவடை

துப்பாக்கிச் சத்தங்களும்
போர் விமான இரைச்சல்களும்
சந்கீதமாகைவிட்ட
ஈழத்துத் தெருக்களில்
எஞ்சிக்கிடக்கின்றன-
மனித உயிர்களும்
தமிழினமும்!

இங்கே –
இரத்த நெடி
மூக்கைத் துளைக்கும்!

ஒப்பாரிச் சத்தங்கள்
காதுகளைச் செவிடாக்கும்;
வீறிட்ட சிசுக்குரல்கள்
ஒவ்வொரு வீடுகளிலும்
பழக்கப்பட்ட ஓசைகளாய்
தெருவரையும் கேட்கும்!

தாய்ப்பாலுக்குக்கும் தாயன்புக்கும்
ஏங்கியவாறே கண்ணை மூடிவிடும் – சிசுக்கள்
உறக்கத்தில்கூட ஏக்கம் கலையாமல்

உயிருக்கும் உடைமைக்கும்
இங்கே உத்தரவாதம் இல்லை
எப்பொழுது வேண்டுமென்றாலும்
உயிர்கள் பறிக்கப்படலாம்

சுடுகாடுத் தேர்கள்
ஒவ்வொரு வீடுகளையும் தேடிவரும்
தவணை முறையில்
தமிழர்களின் பிணங்களைத் தின்பதற்காக!

மரண வாயில்கள்
படுகொலைக் களமாய்
வாயைப் பிளக்கும்!

உயிர்விடும் கதைகள்
நித்தம் நடக்கும்
மனம் வெம்பி கலங்கி அழுது
அண்டை வீட்டாரிடம்
ஆறுதல் கேட்கும்
சோகச் சித்திரம்
கருவறை கிழித்துக்கொண்டு பிறக்கின்ற
ஒவ்வொரு குழந்தையின்
முகத்திலும் குத்தப்படும்!

சுதந்திரம் என்பது
கானல் நீராய்
அடிக்கடி கனவுகளைக் கலைக்கும்;
சுதந்திரமாய் தமிழ்க்காற்றை
சுவாசித்து மூச்சுவிட – இங்கு
யாருக்கும் நாதியில்லை!

நிலவின் ஒளியும்
நட்சத்திரக் கூட்டமும்தான் - இங்கே
மின்சார விளக்குகளாய்
வீடுகளைத் தேடிவரும்!

ஈழத்துச் சிறவர்சிறுமியர்
சாதிக்க நினைப்பதற்கு
இந்த இரவுகள் கூட
ஒருவகையில் நண்பர்கள்தான்!

இராணுவப் படைகள்
படுகொலைப் புதராய்
தமிழ் மங்கையரை விடாமல் துரத்தும்...
கற்பிழந்த பெண்களின் கதறல்
காடுவரை எதிரொலிக்கும்!
மனிதம் புதிய வடிவில் சாகடிக்கப்படும்!

குட்டி விமானங்களும்
ஆகாயம் தொட்டு முத்தமிடும்
போர் விமானங்களும்
ஈழத்தின் சுவடுகளைக் கிழித்தெறியும்...
கல்வீடு மன்வீடு தரைதட்டும்;
எல்லாம் தரைமட்டம் ஆகும்.

மனித உடல்கள்
புவியீர்ப்பை எதிர்த்து
வானத்தை நோக்கி மேல் பறக்கும் -
இரண்டாய்....
மூன்றாய்...
நான்காய்...
பலநூறாய்...
இரத்தமும் சதையுமாய்
வெடித்துச் சிதரும்!

நாங்கள் சாகத் துணிந்து
எதையும் சகிக்க பழகிவிட்டோம்

இன்னும் பல தமிழர்கள்
மரண வீடுகளில்
மகிழ்ச்சியாய் வாழ்ந்துகொண்டிருகிறார்கள்...
எங்கள் ஊரிலும்
புறாக்கள் பறக்கும்
என்ற நம்பிக்கையோடு!

நானும்தான்...
Continue reading →
0 comments

நவரச அழகிகள் 

பெண்டிர்க்கு…
அங்கமெல்லாம் அசையாமல்
அசைந்தாடி பவனிவரும்
அன்ன நடையழகு;
உண்டி சுருங்கிய மெல்லிடையால்
வஞ்சியத்தின் இடுப்பழகு;
கமல முகத்தினிலே காளையரை மயக்கும்
கருத்த கயல் விழிகள் மிக அழகு;

ரோஜாப்பூ மொட்டுப் போல்
கிளி மூக்கு வனப்புகள் கொள்ளையழகு;
வெண்ணிலவின் பார்வை போல்
விரிந்துற்ற  நுதலோ பொட்டுக்கழகு;
காரிருள் ஒத்த பூங்குழலோ
பாவலரின் பா பொய்யா அழகு;
தாடங்கம் பொருத்திய இரு செவிகளும்
மஞ்சள் தேய்த்து கவினேறிய கன்னங்களிரண்டும்
பெண்மைக்கே கவி தேடும் சிறப்பழகு;
ஆகா இவற்றையே விசயம் கொள்ளும்
கொவ்வைப் பழ இதழ்களோ - நாயகனின்
கல் மனதை உருக்கவல்ல மெய்யழகல்லோ!
இங்கண் கணக்கிட்டால்...
இயற்கையின் எழிலோடு யுத்தமிடும்
இப்பெண்கள் எல்லாம் - இப்புவியின்
“நவரச அழகிகள்”தான்!
Continue reading →
0 comments

கொஞ்சப் பாலுக்கு கெஞ்சும் மடல் 

என் வயிற்றுக்குள்
பத்துத் திங்கள்
பத்திரமாய் இருந்தவனே!
உன் தாய் எழுதும்
மடல் இது

நீ விளையாடும் பருவத்தில்
உன்னை என்னுள் தங்கியவள் நான்.

இன்று
உன்னால்
முதியோர் இல்லத்தில்
அடைபட்டுக் கிடக்கிறேன்!

அம்மாவின் பாசத்தை
அமெரிக்க வாசத்தில் தொலைத்தவனே
இந்தக் கிழவி
உனக்கென்ன சுமையா

மகனே!
ஓன்று தெரியுமா
உனக்கு உடல் வலி வந்தபோதெல்லாம்
நான் உள்ளத்தால் துடித்தேன் என்று!
அன்று -
ஒவ்வொரு தடவையும்
உனக்காக மட்டும்தான்
நான் விரதம் இருந்தேன்...

இன்று -
உண்டி சுருங்கி 
பட்டினியால் வாடுகிறேன்...

மகனே!
பால் கொடுத்த என் உடலோ
இன்னும் எத்தனை நாள்தான்
நிலைத்திருக்கும் இங்கே?

எனவே சீக்கிரம் வந்துவிடு
எனக்குப் பால் வார்க்க!

பழகப் பழகப்
பால்தானே புளிக்கும்!
அதற்காக
என் பாசமுமா புளித்துவிட்டது?

என் ஓரடி வயிற்றுக்குள் உதித்தவன்!
இந்த ஆறடி சரீரம்
மண்ணுக்கு உணவாகும் முன்
சீக்கிரம் வா!

உன்னை ஒரு தடவையேனும்
காண வேண்டும் என்றெண்ணி
என் குழிவிழுந்த கண்கள்
ஆவலுடன் காத்திருக்கின்றன...

இப்படிக்கு,
உன்னால்  தாயானவள்!
Continue reading →
0 comments
கனவு பொய்க்க வேண்டும்

ஒரு சாமம் கழிந்த வேளையில் -

உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்
உடைகலைந்த உடல்களுக்கு நடுவில்
வேதாந்தம் தேடும் முனிவனாய்...
நான் !

அன்றாட வாழ்க்கையை
‘டாலர்’களுக்குள் தொலைத்துவிட்டு
பாசத்தைத் தேடும்
பைத்தியக்காரனாய்...

தாய்ப்பால் ஊட்டியவள்
ஈமச்சடங்கில் கலந்து கொள்ளாமல்
மின்னஞ்சல் மூலம்
அஸ்தி கேட்டவனாய்...

காமத்தில் கலங்கி
வெள்ளைக்காரியை
மணம் முடித்த
பாவியாய்...

பத்துத் திங்கள்
கடந்த வேளையில்
அமெரிக்க மனைவி
சிகரெட் புகையை ஊதியபடியே
என்னிடம் கேட்டாள்
“டார்லிங்!
எனக்கு டிவோர்ஸ் வேணும்...”
திகைத்துப் போனேன்!

.........

கனவு கலைந்து
விழித்துப் பார்க்கையில் -
என் சொந்த தேசத்து
சேற்று மண்ணில்
கால் புதைபட்டவனாய்...

நிம்மதியாக
சுவாசம் கொண்டேன்

இனிமேல்
டாலர் கனவும்
அமெரிக்க வாசமும்
என் கனவில்கூட அரும்பக்கூடாது!

பிச்சை புகினும்
பிறந்த மண்ணின்
மக்களிடம்தான் இரக்கவேண்டும்

இயந்திர வாழ்க்கையில்
இறுதி ஊர்வலம்
தொடர்ந்து போக
விரும்பாதவனாய்...

சலனமின்றி உறங்கச் சென்றேன்...

தூரத்து திசையில்
ஒலித்த கீதம்
என் செவியை வருடி
மெல்லச் சென்றது...
“தாய் மண்ணைப் போலொரு சொர்க்கமில்லை
தாயினைக் கடந்தொரு உயிருமில்லை”
Continue reading →
0 comments
கிளிஞ்சல்கள்
   - ஐக்கூ கவிதைகளின் சிதறல்

ஆதியும் அந்தமுமாய்
நுகரப்படுவது
இறைவன்

நல்ல பசி
அருகில் அமிழ்தம் –
ஐம்பெருங்காப்பியம்

மூன்று கால்களுடன்
எங்கள் வீட்டில்
நாற்காலி

‘உப்பிட்டவரை
உள்ளளவும் நினை’
நாய்க்கு மட்டும்

அந்தப் புதருக்குள்
துகிலுரிப்புப் போராட்டம்
அடடே... பாம்பு

வேண்டாம் புகைபோக்கி
கருப்பு வளி
மரண வழி

சூடேறிய பால்
நிர்வாணம் மறைத்தது  
‘ஆடை’

படர்ந்த கொடியில்
வண்ணச் சேலைகள்
வானத்தில் வானவில்

கழனிகளின் கற்பழிப்பில்
உதயமாகும் அரக்கர்கள்
கட்டிடங்கள்

கால் உறிஞ்சி
தலை தரும்
‘இளநீர்’

அலைமோதிய மக்கள் கூட்டம்
சிதறிய உணவுப் பொருட்கள்
வரிசையில் எறும்புகள் !

தேநீர் விருந்தில்
உடைந்து கிடந்தன...
மதுபானக் கோப்பைகள்

விஞ்ஞானிகளே !
வேண்டும் ஓர் அசுர ஊசி
ஓசோன் தைக்க

ஓயாத உழைப்பு
உறக்கம் இல்லை
சுவரில் கடிகாரம்

வலைகளில் எல்லாம்
மிருகங்கள் அகப்படும்
கொசுவலைக்குள் மனிதன்

இறப்புக்கு முன்
முடிகள் காட்டும்-
வெள்ளைக் கொடிகள்

அணைந்த விளக்குகளும்
இருள் விரட்டும்-
‘கண்தானம்’

மனித ஞானம்
மீண்டும் கடவுள்
கணிப்பொறி
Continue reading →
0 comments
ஒன்பதாம் திசையில்  உன்  உலகம்

இளைஞனே!
உன் ஐந்து விரல்களுக்கிடையில்
உலகத்தை விதை.

வெற்றிகளை முத்தமிட
பூமிவரை உதடு திற.

ஒவ்வொரு செயலிலும்
அனுபவம் பெறு.

பூமி – வானம்
இரண்டுமே வெகுதூரம் இல்லை;
பூமியில் இருந்து வானத்தைத் தொடு.
கடலின் ஆழம் காண்;
ஆகாயத்தை அள.

மனிதர்களை அறி!
நண்பர்கள் கூட
நன்றியில்லாதவராய் இருக்கலாம்.

எவரையும் நம்பாதே
எச்சரிக்கையாய் இரு!
எப்பொழுதும் விழித்திரு!

உறக்கத்தில் கூட
கண் திறந்து இரு!
சூழ்ச்சிக்காரர்கள் உன்னை
சூழ்ந்து கொள்ளலாம்.

இதயத்தைப் பத்திரப்படுத்திக்கொள்!
‘ஹார்மோன்கள் உன்னைக்
காதலிக்கத் தூண்டலாம்;
பெண்களைக் கண்டால்
உன் இதயம்
நூறு தடவை துடிக்கலாம்;
தியான மருத்துவம் கொள்.

காதலைக் கட
காமத்தை எரி

வாழ்க்கை உன்னுடையது
வாழ்ந்து பார்!
உன் இணையை நீயே தேர்ந்தெடு
அது உன் உரிமை! - அதற்காக
உறவுகளை மிதியாதே
தாய் தந்தை எதிர்காதே

அழகைப் பார்த்து
அன்பைக் கேட்காதே!
வாலிபம் கடந்தால்
அழகு அர்த்தமற்றுவிடும்;
முதுமைப் பருவத்தில் – அழகு
தொழுநோயாய்த் தோன்றலாம்!

மனதைப் படிக்கும்
மந்திரம் தெரி.

காதலும் கற்பும் ஒன்றுதான் -
இறக்கும் வரை
துணையை நேசி;
அன்பைப் பிழிந்து
இல்லறம் செதுக்கு.

பிறருக்காக கொள்கையை விற்காதே!
இலட்சியங்களை இமயத்தில் விதை
காலம் உன் பெயர் சொல்லும்

உன் பலத்தை உணர்
உன்னில் இருக்கும்
உன்னை அறி

தன்னம்பிக்கை கொள்
பூமியைத் தூக்கி
உன் தோள்களில் நிறுத்து!
உன் நெற்றிப் பொட்டில்
சூரியனைச் சிறையிடு!

சமுதாயச் சடங்குகளை
உன் இரும்புக் கரங்களால் உடைத்தெறி;
திமிரி எழுந்து
சீக்கிரம் புறப்பட்டு வா...

உனக்காகக் காத்திருக்கிறது
ஒன்பதாம் திசை!
Continue reading →