February 1, 2013
0 comments
கிளிஞ்சல்கள்
   - ஐக்கூ கவிதைகளின் சிதறல்

ஆதியும் அந்தமுமாய்
நுகரப்படுவது
இறைவன்

நல்ல பசி
அருகில் அமிழ்தம் –
ஐம்பெருங்காப்பியம்

மூன்று கால்களுடன்
எங்கள் வீட்டில்
நாற்காலி

‘உப்பிட்டவரை
உள்ளளவும் நினை’
நாய்க்கு மட்டும்

அந்தப் புதருக்குள்
துகிலுரிப்புப் போராட்டம்
அடடே... பாம்பு

வேண்டாம் புகைபோக்கி
கருப்பு வளி
மரண வழி

சூடேறிய பால்
நிர்வாணம் மறைத்தது  
‘ஆடை’

படர்ந்த கொடியில்
வண்ணச் சேலைகள்
வானத்தில் வானவில்

கழனிகளின் கற்பழிப்பில்
உதயமாகும் அரக்கர்கள்
கட்டிடங்கள்

கால் உறிஞ்சி
தலை தரும்
‘இளநீர்’

அலைமோதிய மக்கள் கூட்டம்
சிதறிய உணவுப் பொருட்கள்
வரிசையில் எறும்புகள் !

தேநீர் விருந்தில்
உடைந்து கிடந்தன...
மதுபானக் கோப்பைகள்

விஞ்ஞானிகளே !
வேண்டும் ஓர் அசுர ஊசி
ஓசோன் தைக்க

ஓயாத உழைப்பு
உறக்கம் இல்லை
சுவரில் கடிகாரம்

வலைகளில் எல்லாம்
மிருகங்கள் அகப்படும்
கொசுவலைக்குள் மனிதன்

இறப்புக்கு முன்
முடிகள் காட்டும்-
வெள்ளைக் கொடிகள்

அணைந்த விளக்குகளும்
இருள் விரட்டும்-
‘கண்தானம்’

மனித ஞானம்
மீண்டும் கடவுள்
கணிப்பொறி

Leave a Reply