கனவு பொய்க்க வேண்டும்
ஒரு சாமம் கழிந்த வேளையில் -
உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்
உடைகலைந்த உடல்களுக்கு நடுவில்
வேதாந்தம் தேடும் முனிவனாய்...
நான் !
அன்றாட வாழ்க்கையை
‘டாலர்’களுக்குள் தொலைத்துவிட்டு
பாசத்தைத் தேடும்
பைத்தியக்காரனாய்...
தாய்ப்பால் ஊட்டியவள்
ஈமச்சடங்கில் கலந்து கொள்ளாமல்
மின்னஞ்சல் மூலம்
அஸ்தி கேட்டவனாய்...
காமத்தில் கலங்கி
வெள்ளைக்காரியை
மணம் முடித்த
பாவியாய்...
பத்துத் திங்கள்
கடந்த வேளையில்
அமெரிக்க மனைவி
சிகரெட் புகையை ஊதியபடியே
என்னிடம் கேட்டாள்
“டார்லிங்!
எனக்கு டிவோர்ஸ் வேணும்...”
திகைத்துப் போனேன்!
.........
கனவு கலைந்து
விழித்துப் பார்க்கையில் -
என் சொந்த தேசத்து
சேற்று மண்ணில்
கால் புதைபட்டவனாய்...
நிம்மதியாக
சுவாசம் கொண்டேன்
இனிமேல்
டாலர் கனவும்
அமெரிக்க வாசமும்
என் கனவில்கூட அரும்பக்கூடாது!
பிச்சை புகினும்
பிறந்த மண்ணின்
மக்களிடம்தான் இரக்கவேண்டும்
இயந்திர வாழ்க்கையில்
இறுதி ஊர்வலம்
தொடர்ந்து போக
விரும்பாதவனாய்...
சலனமின்றி உறங்கச் சென்றேன்...
தூரத்து திசையில்
ஒலித்த கீதம்
என் செவியை வருடி
மெல்லச் சென்றது...
“தாய் மண்ணைப் போலொரு சொர்க்கமில்லை
தாயினைக் கடந்தொரு உயிருமில்லை”