கொஞ்சப் பாலுக்கு கெஞ்சும் மடல்
என் வயிற்றுக்குள்
பத்துத் திங்கள்
பத்திரமாய் இருந்தவனே!
உன் தாய் எழுதும்
மடல் இது
நீ விளையாடும் பருவத்தில்
உன்னை என்னுள் தங்கியவள் நான்.
இன்று
உன்னால்
முதியோர் இல்லத்தில்
அடைபட்டுக் கிடக்கிறேன்!
அம்மாவின் பாசத்தை
அமெரிக்க வாசத்தில் தொலைத்தவனே
இந்தக் கிழவி
உனக்கென்ன சுமையா
மகனே!
ஓன்று தெரியுமா
உனக்கு உடல் வலி வந்தபோதெல்லாம்
நான் உள்ளத்தால் துடித்தேன் என்று!
அன்று -
ஒவ்வொரு தடவையும்
உனக்காக மட்டும்தான்
நான் விரதம் இருந்தேன்...
இன்று -
உண்டி சுருங்கி
பட்டினியால் வாடுகிறேன்...
மகனே!
பால் கொடுத்த என் உடலோ
இன்னும் எத்தனை நாள்தான்
நிலைத்திருக்கும் இங்கே?
எனவே சீக்கிரம் வந்துவிடு
எனக்குப் பால் வார்க்க!
பழகப் பழகப்
பால்தானே புளிக்கும்!
அதற்காக
என் பாசமுமா புளித்துவிட்டது?
என் ஓரடி வயிற்றுக்குள் உதித்தவன்!
இந்த ஆறடி சரீரம்
மண்ணுக்கு உணவாகும் முன்
சீக்கிரம் வா!
உன்னை ஒரு தடவையேனும்
காண வேண்டும் என்றெண்ணி
என் குழிவிழுந்த கண்கள்
ஆவலுடன் காத்திருக்கின்றன...
இப்படிக்கு,
உன்னால் தாயானவள்!